சர்வதேச மாநாடுகள் மற்றும் உயர்மட்ட நிகழ்வுகளில் தலைவர்களுக்கு பரிமாறப்படும் உணவுப் பட்டியல் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2005ம் ஆண்டு ஐஸ்லாந்து சென்றபோது நடந்த ஒரு சம்பவம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
மீன் மற்றும் கடல் உணவுகளுக்குப் பெயர்பெற்ற ஐஸ்லாந்தில், அதிபர் மாளிகை விருந்துகளில் வழக்கமாக அசைவ உணவுகளே முக்கியமாக இடம்பெறும். ஆனால் தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்ட கலாமுக்காக அந்நாட்டு அரசு தனிச்சிறப்பு ஏற்பாடுகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 மே மாதத்தில் அரசு முறைப் பயணமாக ஐஸ்லாந்து சென்ற கலாமை, அந்நாட்டு அதிபர் ஓலாபுர் ரக்னார் கிரிம்ஸன் பிரம்மாண்ட அரசு விருந்தில் உபசரித்தார். அந்த விருந்துக்காக முழுக்க முழுக்க சைவ உணவுகள் கொண்ட தனி மெனு தயாரிக்கப்பட்டது.
இந்திய சமையல் முறையையும் கலாமின் எளிய உணவுப் பழக்கத்தையும் கருத்தில் கொண்டு காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அடிப்படையாகக் கொண்ட உணவுகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பயணத்திற்கு முன்பே இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு நெறிமுறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, கலாமின் உணவு விருப்பங்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
விருந்தினர்களின் கலாசாரம் மற்றும் உணவுப் பழக்கங்களுக்கு உயர்மட்ட நிகழ்வுகளில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வாக இது குறிப்பிடப்படுகிறது.





