சென்னை: வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை, வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் மூன்று புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விண்வெளி பயன்பாட்டு மையம் (இஸ்ரோ-சாக்) எச்சரித்துள்ளது.

இஸ்ரோ-சாக் வளிமண்டலம் மற்றும் பெருங்கடல் அறிவியல் பிரிவு வெளியிட்ட ஆய்வறிக்கையில், அக்.–டிச. காலகட்டத்தில் உருவாகக்கூடிய புயல்கள் கடந்த 44 ஆண்டுகளில் காணாத அளவுக்கு அதிக தீவிரம் கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கடுமையான சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக கடற்கரை பகுதிகளில் முன்கூட்டியே திட்டமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அறிக்கை வலியுறுத்துகிறது.

கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்கள், சுற்றுலாத்துறை மற்றும் அரசு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் புயல் பேரிடர்களை எதிர்கொள்ள முன்பே தயாராக இருக்க வேண்டும் என இஸ்ரோ-சாக் கேட்டுக்கொண்டுள்ளது.