தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தேசிய அளவில் ‘மூன்றாவது அணி’ அமைப்பதற்கான முயற்சியாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, கனிமொழி மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்தித்து உரையாடியதாகவும், அந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் சரத்பவார் மற்றும் அவரது மகளும் லோக்சபா எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை கனிமொழி சந்தித்து பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
‘இண்டியா’ கூட்டணிக்குள் காங்கிரசுடன் கருத்து வேறுபாடு கொண்ட மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இரண்டிற்கும் மாற்றாக ஒரு தேசிய அளவிலான அணியை உருவாக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சந்திப்புகள் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
உத்தவ் தாக்கரேவை சந்தித்தபோது, தென் மாநிலங்களை பாதிக்கக்கூடிய லோக்சபா தொகுதி மறு சீரமைப்பு (delimitation) விவகாரம் மற்றும் அதற்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து கனிமொழி பேசினார் எனவும் கூறப்படுகிறது. மஹாராஷ்டிராவிலும் காங்கிரசுடன் உத்தவ் தாக்கரேக்கு கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாகவும் அந்த தகவல் குறிப்பிடுகிறது.
அடுத்த கட்டமாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை கனிமொழி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து இந்த முயற்சியை தொடர உள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





