ராஜ்யசபா சுயேச்சை எம்.பியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், தன்னை ‘அறிவுசார் நக்சல்’ எனக் கருதுவதாகவும், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார். கேரளாவின் கொச்சியில் “குதிரை பேரம் மற்றும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

டில்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதமேந்திய நக்சல்களை ஒழித்துவிட்டதாகவும், ஆனால் ‘அறிவுசார் நக்சல்கள்’ இன்னும் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் பி. சிதம்பரம், ‘அறிவுசார் நக்சல்’ என அழைக்கப்படுவதில் பெருமை என தெரிவித்திருந்தார்.

கொச்சி நிகழ்வில் பேசிய சிபல், ‘குதிரை பேரம்’ என்ற சொல்லின் பழைய அர்த்தத்தையும் இன்றைய அரசியல் பயன்பாட்டையும் ஒப்பிட்டார். முன்பு அது குதிரைகளை விற்பது தொடர்பானதாக இருந்தது; விற்பவர்கள் சில தந்திரங்களை பயன்படுத்துவார்கள் என்றார்.

ஆனால் இன்றைய அரசியல் சூழலில், தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடைமுறையையே ‘குதிரை பேரம்’ என குறிப்பிடப்படுவதாக அவர் கூறினார். இது ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைக்கும் செயல் என்றும், வெறும் அரசியல் ஊழல் மட்டுமல்ல; அரசியல் சாசனத்திற்கு தொடர்ச்சியான நெருக்கடியாகவும் இருப்பதாகவும் சிபல் தெரிவித்தார்.