டில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சில நாடுகளில் நடைபெறும் போர்கள் உலகளவில் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை அதிகமாக பாதிக்கத் தொடங்கியுள்ளதாக எச்சரித்தார். உலகில் மோதல்களும் பதற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தொழில்நுட்பத்தையும் அரிய வகை கனிம வளங்களையும் ஒரு நாட்டுக்கு எதிராக “ஆயுதமாக” பயன்படுத்துவது உலகின் வளர்ச்சியையும் வளத்தையும் பாதிக்கும் என மோடி கூறினார். புதிய தொழில்நுட்பங்களின் பயன் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

உலக மக்கள் தொகையில் சுமார் 49% மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% பிரதிநிதித்துவம் கொண்ட 11 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு, சரக்கு போக்குவரத்து-வினியோக தொடர், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தொற்று நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தியது. தொற்றுநோய், பருவகால பேரிடர், வினியோக தடைகள் போன்றவை நாடுகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக மோடி தெரிவித்தார்.

ஒரு நாட்டின் நெருக்கடி மற்ற நாடுகளையும் பாதிக்கும் நிலையில், சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து தயாராக இருப்பதும், தேவையான நேரத்தில் விரைவாக நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என அவர் கூறினார். இதன் ஒரு பகுதியாக, தொற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டதாகவும், பேரிடர் நேரங்களில் தகவல்களை விரைவாக பகிர வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேறுபாடுகள் அடையாளமாக இருக்கட்டும்; ஒற்றுமை வலிமையாக இருக்கட்டும் என கூறிய மோடி, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அரசுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோர், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என்றார். வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எதிரானவை அல்ல; இரண்டையும் சமநிலையுடன் முன்னெடுத்துச் செல்வதே நிலையான வளர்ச்சி எனவும் அவர் வலியுறுத்தினார்.