ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.73.64 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் போலீசால் முடக்கப்பட்டுள்ளன.
முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பா.ஜ. ஆட்சியில், மாநிலம் முழுவதும் போதைப் பொருள் வலையமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஐ.ஜி. விகாஸ் குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கடத்தல்காரர்களுக்கு எதிராக 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அவற்றில் 38 வழக்குகளில் சொத்துகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முடக்கப்பட்ட சொத்துகளில் வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும் என அவர் கூறினார். சித்தோர்கர் மாவட்டம் கங்ரார் பகுதியைச் சேர்ந்த ராகுல் பஞ்சாராவுக்கு தொடர்புடைய ரூ.18.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன; பரான் மாவட்டத்தில் ரூ.18.48 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஜாலாவாரில் ஒன்பது குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.12.65 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரதாப்காரில் கோழிப் பண்ணை மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட ரூ.8.24 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக ரூ.73.64 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.





