பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்த சீன அதிபர் ஷீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார். ஆனால், மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்காக பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் ஷீ பங்கேற்கவில்லை. இதனால் பல கேள்விகளும் யூகங்களும் எழுந்தன.
இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்த நிலையில், டில்லியில் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாடு தொடங்குவதற்கு முன் வரை ஷீ வருகை உறுதி செய்யப்படாமல் இருந்தது; தொடக்கத்திற்கு ஒரு நாள் முன்புதான் அவரது பயணம் உறுதி செய்யப்பட்டது. எல்லைப் பிரச்னை உள்ளிட்ட இருநாட்டு உறவுகளில் பதற்றம் நிலவும் சூழலில், அவரது வருகை முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது.
மாநாட்டின்போது ஷீ, பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோருடன் சகஜமாக உரையாடியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘குளோபல் சவுத்’ எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் குரலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற மோடியின் கருத்தையும் அவர் ஆதரித்தார்.
நேற்று மாலை மோடி-ஷீ சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கான சாதகமான முன்னேற்றமாகவும், அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் நடந்த இரவு விருந்தில் மட்டும் ஷீ பங்கேற்கவில்லை.
ஷீ விருந்தில் பங்கேற்காததற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை இந்திய அரசு அல்லது சீன அரசு வெளியிடவில்லை. நீண்ட தூர பயணம் மற்றும் நேர வித்தியாசம் காரணமாக ஏற்பட்ட சோர்வு காரணமாக அவர் வரவில்லை என கூறப்படுகிறது. சீன தரப்பில், இந்தப் பயணம் இருதரப்பு உறவில் ‘புதிய பாதை’ உருவாக்கியதாகவும், தனிப்பட்ட காரணங்களால் விருந்தில் பங்கேற்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே விருந்தில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் பங்கேற்கவில்லை; ஆனால் அவர் மாநாடு முடிந்ததும் புறப்படுவது முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததால் அது சர்ச்சையாகவில்லை.





