அமைச்சர் ஆதவ் தொடர்ந்த ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரும் சிவில் வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவின் உறவினர் என திமுக ஐடி விங் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும், அதேபோல் ஸ்டாலினும் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிராக, கைது செய்யப்பட்டவர் தனது உறவினர் அல்ல என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த பதிவுகளால் தன் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறி, ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி விசாரித்தார்.
அமைச்சர் ஆதவின் மனுவுக்கு பதிலளிக்குமாறு ஸ்டாலினுக்கும் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பதில் மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 21 வரை அவகாசம் கோரினார்.
அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.





