மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இரண்டு தொகுதிகளும் முன்பே அ.தி.மு.க. வெற்றி பெற்றவை என்றும், கட்சிக்கு செல்வாக்கு உள்ள பகுதிகள் என்றும் கூறினார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சென்னை திரும்பிய பிறகு, அந்தப் பயணத்தின் முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்படுவதோடு, கொசுத் தொல்லை அதிகரிப்பதாகவும், மாணவர்கள் படிக்க முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.





