ஹிந்தி தினத்தை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற ஹிந்தி மொழி மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஒரு குழந்தைக்கு உலகைக் கற்றுத் தருவதில் தாய்மொழிதான் மிகச் சிறந்த வழி” என தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையின் (NEP) நோக்கமே தாய்மொழி வழிக் கல்வியை வலுப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை பலவீனம் அல்ல; அது மிகப் பெரிய பலம் என அவர் குறிப்பிட்டார். பல மொழிகள் இருந்தாலும், ஒவ்வொரு மொழிக்கும் தனித்த வரலாறு, மண் சார்ந்த மரபுகள் மற்றும் வாழ்க்கையை அணுகும் தனித்த பார்வை இருப்பதாகவும், இது “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற இந்திய உணர்வை வலுப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; சமூகத்தின் நினைவுகளையும் உணர்வுகளையும் தாங்கி நிற்கும் ஒன்றாகவும் அவர் விளக்கினார். நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் மொழியாக ஹிந்தி முக்கிய பங்காற்றி வருவதாகவும், இந்திய மொழிகளுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் இடையிலான முக்கிய இணைப்பாக ஹிந்தியை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அனைத்து இந்திய மொழிகளின் கண்ணியம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தபடியே முன்னேறினால்தான் ஹிந்தியின் வளர்ச்சியும் அர்த்தமுள்ளதாக அமையும் என அவர் கூறினார். தனது தாய்மொழி குஜராத்தி என்றாலும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள ஹிந்தி உதவுவதாகவும் அவர் சொன்னார்.
தொடக்கக் கல்வி குறித்து பேசுகையில், பெற்றோர் குழந்தைகளுடன் தாய்மொழியிலேயே பேச வேண்டும் என்றும், உலகத்திலிருந்து கற்றுக்கொள்ளும் போதும் தாய்மொழியை மறக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தொடக்கக் கல்வியை தாய்மொழியிலேயே கற்பிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதாகவும், தாய்மொழியில் கல்வி கற்றால் குழந்தைகளின் சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன் மேம்படும் என்றும் கூறினார். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் சமமாக வளர்த்தெடுக்கவும் அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.





