கோவையில் தீயணைப்பு வீரர்களுக்கான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் வழங்கப்படவில்லை எனக் கூறி, அவசர பணிகளில் தங்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22 சிலிண்டர்கள் வெடித்த சம்பவத்தில், சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர். விடுமுறையில் இருந்தவர்களும் தகவலறிந்து உடனடியாக பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. பல சிலிண்டர்கள் வெடிக்கும் நிலையில் ‘வீங்கி’ இருந்த சூழலில், மிக ஆபத்தான நிலைமை உருவானது.

சிலிண்டர்கள் அருகிலேயே வெடித்த போதிலும் வீரர்கள் பணியைத் தொடர்ந்தனர். ஆனால் அந்த நேரத்தில் சிலர் முறையான பாதுகாப்பு காலணிகள் இல்லாமல் செருப்பு அணிந்தும், பாதுகாப்பு கையுறைகள் இல்லாமலும் பணியாற்றியதை காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வீரர்கள் கூறுகையில், ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உபகரணங்கள் வழங்கப்படுவதால், காலை ஷிப்ட் பயன்படுத்தியவற்றை இரவு ஷிப்ட் மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர். பெரிய அளவிலான விபத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் பணிக்கு வரும்போது உபகரண பற்றாக்குறை தீவிரமாகிறது என்றும் கூறினர்.

மேலும் தலைக்கவசங்கள் சரியாக பொருந்தாததால் பணியின்போது அசைந்து, கண்களுக்கு கீழே இறங்கும் நிலை ஏற்படுகிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக பாதுகாப்பு உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்; தலைக்கவசங்கள் தலை அளவுக்கு ஏற்ப சரிசெய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.