நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக, 2,843 கி.மீ. நீளமுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட (DFC) திட்டப் பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பயணியர் ரயில்களுடன் ஒரே பாதையில் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் ஏற்பட்ட தாமதம் மற்றும் சேவை பாதிப்பு குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சகம் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு முக்கிய வழித்தடங்களை ₹1.24 லட்சம் கோடி செலவில் அமைத்தது. இதில் 1,337 கி.மீ. நீளமுள்ள கிழக்கு வழித்தடம் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த நிலையில், 1,506 கி.மீ. நீளமுள்ள மேற்கு வழித்தடத்தின் மீதமிருந்த பகுதிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில், மேற்கு வழித்தடத்தில் எஞ்சியிருந்த 326 கி.மீ. நீளமுள்ள மூன்று முக்கிய பிரிவுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, முழு 2,843 கி.மீ. வலையமைப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கிழக்கு DFC பஞ்சாப் லூதியானாவின் நியூ சஹ்னேவாலில் தொடங்கி ஹரியானா, உத்தர பிரதேசம் வழியாக பீஹாரின் நியூ சோன்நகர் வரை செல்கிறது. மேற்கு DFC உ.பி.யின் நியூ தாத்ரியில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் வழியாக மஹாராஷ்டிராவின் நியூ ஜே.என்.பி.டி.யில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் முடிவடைகிறது.

பிரதமர் மோடி கூறியதன்படி, இந்த வழித்தடம் முழுமை அடைந்ததால் தினமும் 430க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்க முடியும்; முன்பு லாரிகள் மூலம் 30 மணி நேரம் எடுத்த பயணம் இனி 10–12 மணி நேரமாக குறையலாம். ரயில்வே அதிகாரிகள், சாதாரண பாதைகளில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் சென்ற சரக்கு ரயில்கள், இங்கு தடையின்றி மணிக்கு 70–80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும் என்றும், மின்மயமாக்கப்பட்ட உயரமான பாதைகள் காரணமாக இரட்டை அடுக்கு கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தனர்.

இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, காரக்பூர்–விஜயவாடா (கிழக்கு கடற்கரை), புசாவல்–காரக்பூர் (கிழக்கு–மேற்கு), விஜயவாடா–இட்டார்சி (வடக்கு–தெற்கு) ஆகிய புதிய சரக்கு வழித்தடங்களுக்கான திட்டமிடலை ரயில்வே தொடங்கியுள்ளது. மேலும், கடந்தாண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு சரக்கு போக்குவரத்து வருவாய் 6.27% உயர்ந்ததாகவும், சரக்கு அளவு 13 கோடி டன்னிலிருந்து 14 கோடி டன்னாக அதிகரித்ததாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.