திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தங்களின் கட்சியினரே முறைகேட்டில் ஈடுபட்டாலும் கட்சி சார்ந்தும் சட்டபூர்வமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
சில சட்டமாற்றங்களை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், முந்தைய ஆட்சியைப் போல பாரபட்சமான செயல்பாடு இருக்காது என்றும் அவர் கூறினார். தவறு செய்தவர்களை பாதுகாக்கும் அணுகுமுறை இல்லை என வலியுறுத்தி, முறைகேடுகள் காரணமாக பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் தொடர்பாக கள்ளச்சந்தையில் மது விற்பனை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை போன்ற புகார்கள் இருந்தால் உடனடியாக கவனத்துக்கு கொண்டு வருமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். சமூக வலைதளங்களில் வீடியோ வந்ததும் தவறு செய்தவர்கள் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தை மேற்கோள் காட்டி, எந்த மாவட்டத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்னைகள் அதிகமாக உள்ளனவோ, அங்கு விற்பனையாளர் அல்லது மேற்பார்வையாளர் மட்டுமல்ல, மாவட்ட மேலாளரும் பொறுப்பேற்க வேண்டும் என்றார். இனிமேல் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
செப்டம்பர் 1 முதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக கடுமையான தண்டனைகள் மட்டுமே மாற்றத்தை கொண்டு வரும் என்ற கருத்தில் முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.





