பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் ரூ.30 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், மும்பையைச் சேர்ந்த 56 வயது ரோஷன் பூஷன் சேத்தை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றுவிட்டு, அடையாளத்தை மாற்றிக் கொண்டு தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் கூறுகையில், ரோஷன் 2020ஆம் ஆண்டு ‘இன்வெஸ்டாக்’ என்ற செயலியை உருவாக்கி பங்குச் சந்தை முதலீடு குறித்து விளம்பரம் செய்ததாகவும், இதை நம்பி காந்திவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா முதலீடு செய்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் ஷாவின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இதேபோல் பணம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
தொடக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு சிறிதளவு லாபத் தொகையை வழங்கிய ரோஷன், பின்னர் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு கார்கள் உள்ளிட்ட வசதிகளுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அவர், பணத்தை திருப்பிக் கேட்டு முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுத்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரலில் தலைமறைவானதாக போலீசார் கூறினர்.
சஞ்சய் ஹிராலால் ஷா மற்றும் வெளிநாடு வாழ் இந்திய பெண் உள்ளிட்டோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து தேடுதல் நடத்தியது. இதையடுத்து குஜராத்தின் வல்சாத் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ரோஷனை கைது செய்தனர். அவரிடமிருந்து மூன்று சொகுசு கார்கள், 14 உயர்ரக கைக்கடிகாரங்கள், ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரது மூன்று குடியிருப்புகள் முடக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





