மஹாராஷ்டிராவின் நாசிக்கில் விநாயகர் சதுர்த்தி காலத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த சிறப்பு கொழுக்கட்டை கிலோ ரூ.27,000 என்ற விலையில் விற்கப்பட்டது.
‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்புக் கடை 2021 முதல் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த வகை கொழுக்கட்டையை விற்பனை செய்து வருகிறது. அறிமுகமான 2021ல் கிலோ ரூ.12,000க்கு விற்கப்பட்ட இது, தங்க விலை உயர்வைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதிக விலையாக நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொழுக்கட்டை முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடை கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய் தூள், நெய் உள்ளிட்ட பொருட்களுடன் தயாரித்து, மேலே சாப்பிடக்கூடிய தங்க முலாம் பூசப்படுவதாக கூறப்படுகிறது. இதில் 24 காரட் தூய்மையான தங்க முலாம் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட மருத்துவர்கள், தூய்மையான தங்கம் செரிமான அமிலங்களுடன் வேதிவினை செய்யாது; ரத்தத்தில் கலக்காமல் செரிமான மண்டலம் வழியாக வெளியேறும் என தெரிவித்துள்ளனர். மேலும் தங்கம் உட்கொள்வதால் ஊட்டச்சத்து நன்மை இல்லை; இது பெரும்பாலும் ஆடம்பரத்திற்கும் காட்சி அழகிற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், பிற உலோகங்கள் கலந்த நகைத் தங்கத்தை உட்கொள்வது நச்சுத்தன்மை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.





