இஸ்லாமாபாத் அரசு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அஸார் (58) குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.24 லட்சம் பரிசு வழங்கப்படும் என பரிசுத் தொகையை உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவை குறிவைத்து கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நடந்த பல தாக்குதல்களில் அஸார் முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. 2001 பார்லிமென்ட் தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தள தாக்குதல், 2019 புல்வாமா குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் இதில் குறிப்பிடப்படுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு சபை அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
2001 பார்லிமென்ட் தாக்குதலுக்குப் பிறகு அஸாரை ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர் பாகிஸ்தானில் இல்லை; ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இதை ஆப்கான் அரசு மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2021-ல் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அஸாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, தகவலுக்கு ரூ.17.20 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது. தற்போது அந்த தொகை ரூ.24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அழுத்தத்தை குறைக்கவும், எப்.ஏ.டி.எப். (FATF) எனப்படும் சர்வதேச நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் ‘சாம்பல் பட்டியலில்’ மீண்டும் இடம் பெறாமல் தப்பிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.





