ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜ குறிப்பிடத்தக்க முன்னிலை பெற்று, 4,000க்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக வெளியான முடிவுகள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 73% வாக்குப்பதிவு நடந்ததாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை திங்கள் காலை 8 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 10 மாநகராட்சிகளில் பாஜ 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜோத்பூர் மாநகராட்சியில் இரு கட்சிகளும் சமநிலையில் இருப்பதாகவும், பரத்பூர் மாநகராட்சி சுயேட்சைகளின் வசம் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாஜ 403 மாநகராட்சி வார்டுகள் உட்பட மொத்தம் 4,049 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 300 மாநகராட்சி வார்டுகள் உட்பட 3,456 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 2,438 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜவின் வெற்றியை மாநில முதல்வர் பஜன்லால் சர்மா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.