திருச்சி மலைக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், பிறரை இழிவாக பேசுவது தி.மு.க.வின் “மரபணு” என விமர்சித்தார். மற்றவர்களை கீழ்த்தரமாக பேசுவது அந்தக் கட்சிக்கு கைவந்த கலை என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை குறிப்பிட்டு, நடிகர் அஜித் லண்டனில் பங்கேற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்ததில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பினார். எதையாவது விமர்சித்துக் கொண்டிருப்பதால்தான் அவர்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் இன்னும் தொடர்கின்றன; அவற்றை சரி செய்து வருகிறோம் எனவும் ரமேஷ் கூறினார். சிலர் அரசியல் செய்வதற்காக போராட்டங்களை நடத்துகின்றனர் என்றும், தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியது தவறல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதை தான் எதிர்க்கிறோம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை கோவிலில் மக்களோடு பொது வரிசையில் தரிசனத்துக்கு சென்றால் என்ன தவறு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அரசியல்வாதிகளை கோவிலுக்குள் அழைத்துச் செல்லத்தான் அறநிலையத்துறை ஊழியர்கள் இருக்கிறார்களா என்றும் விமர்சித்தார். கடந்த தி.மு.க. ஆட்சியில் மணிக்கணக்கில் காத்திருந்த மக்களை கேலி செய்த சேகர்பாபுவிற்கு, இப்போது அந்த கஷ்டம் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.