சேலம்: சேலம் மண்டலத்தில் இயக்கப்பட உள்ள 25 புதிய டவுன் பஸ்கள், த.வெ.க. கட்சிக் கொடி வண்ணமாகக் கூறப்படும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் பூசப்பட்டு சேவைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு பஸ்களின் நிறம் பச்சையாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் பஸ்களின் நிறத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
2026 சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றதையடுத்து, புதிய பஸ்களில் இந்த வண்ணத் திட்டம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் பணிமனையின் கீழ் 492 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 15 ஆண்டுகளை கடந்த பஸ்களுக்கு மாற்றாக புதிய பஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 25 பஸ்கள் மஞ்சள்-சிவப்பு நிறங்களில் பூசப்பட்டு, ஜான்சன்பேட்டை பணிமனையில் இயக்கத்திற்குத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
சேலம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது 25 புதிய டவுன் பஸ்கள் வந்துள்ளன; மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பஸ்களின் வண்ணம் குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்றும் தெரிவித்தனர்.





