திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டசபையை நடுநிலையுடன் நடத்தி வருகிறேன்; எம்.எல்.ஏ.க்களை பேச அனுமதிப்பதிலும் சபை நடத்துவதிலும் எந்த “துண்டுச்சீட்டுக்கும்” அடிபணிய மாட்டேன் என்று சபாநாயகர் பிரபாகர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: அனைத்து எம்.எல்.ஏ.க்களின் மாண்பையும் காப்பது என் பணி. சட்ட விதிகள் மற்றும் மரபுகளின்படியே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கட்சி பாகுபாடின்றி புதிய உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கி வருகிறேன்.
சமீபத்திய சபை நிகழ்வுகளை குறிப்பிட்டு, தினமும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கே அதிக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், முதல்வரின் பதிலுரையின் போது அதை தடுக்கும் நோக்கில் கூச்சல், குழப்பம் செய்ததாகவும் அவர் கூறினார். சபைக்குள் பதாகைகள் ஏந்தி நிற்பது விதிகளுக்கு எதிரானது என்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அமைதியாக ‘பாயின்ட் ஆப் ஆர்டர்’ கேட்டிருந்தால் பேச வாய்ப்பு அளித்திருப்பேன் என்றும் தெரிவித்தார். தி.மு.க. கொறடா வேலுவுக்கு முழு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நால்வர் ராஜினாமா விவகாரம் ஆய்வில் இருப்பதாகவும், முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். அடுத்த தேதியை நிர்ணயித்து முறையான, விரிவான மற்றும் நேரடி விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.
மேலும், முதல்வரை மிரட்டும் விதமாக பேசியதாக கூறப்படும் தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டசபை உரிமைக்குழுவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





