டில்லியிலிருந்து துபாய் செல்ல திட்டமிடப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி 5111 மற்றும் எஸ்ஜி 5105 ஆகிய இரண்டு பன்னாட்டு விமானங்கள் நீண்ட நேர தாமதத்தால் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தகவலின்படி, விமானங்களின் புறப்பாட்டு நேரம் பலமுறை மாற்றப்பட்டு, மொத்தமாக 29 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானது. விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தாமதம் நீடித்ததால், 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலைய வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உரிய முறையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், பயண கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த நேரத்தில் விமான நிறுவன ஊழியர்கள் யாரும் அங்கு வரவில்லை என கூறப்படும் நிலையில், விமான நிலைய ஊழியர்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தனர்.
இதற்கிடையில், ஸ்பைஸ்ஜெட் வெளியிட்ட அறிக்கையில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளது.





