சென்னை: முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்யவும் தொழில்களை விரிவாக்கவும் பல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இவ்வொப்பந்தங்களின் மொத்த முதலீடு ரூ.12,000 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்வர்த்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் போன்ற துறைகளில் தமிழகத்தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான MoU தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் MoU செய்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் உலகளாவிய திறன் மையம் (GCC) அமைப்பதற்காக ‘எர்ன்ஸ்ட் அண்டு யங்’ நிறுவனத்துடன் MoU கையெழுத்தாகியுள்ளது. சென்னை மவுன்ட்–பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஜி.சி.சி. காரிடர் பகுதியில் அமைய உள்ள இந்த மையம் ரூ.1,000 கோடி முதலீட்டையும் 2,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், ‘எம்பெடட் சிஸ்டம்ஸ்’, மின்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் துறைகளில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திருச்சி மற்றும் சென்னையில் உள்ள தன் உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்ய உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரிட்டன் நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.