கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கட்சியின் அதிருப்தி லோக்சபா எம்.பி.க்கள் பெரும்பான்மையினர் விரைவில் பா.ஜ.கவில் இணைவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தி அணியில் உள்ள 20 எம்.பி.க்களில் 17 பேர் துர்கா பூஜை பண்டிகைக்கு முன்பாக பா.ஜ.கவில் சேர முடிவு செய்துள்ளதாக ஒரு அதிருப்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் டி.எம்.சி. கட்சி கடுமையான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அரசியல் சூழல் மாற்றமடைந்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் முதன்முறையாக பா.ஜ. ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு, மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும், லோக்சபா எம்.பி.யும், கட்சியின் பொதுச்செயலருமான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக பல நிர்வாகிகள் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், டி.எம்.சி.யின் மொத்த 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், லோக்சபாவில் டி.எம்.சி.யின் 28 எம்.பி.க்களில் 20 பேர் தனி அணியாக செயல்பட்டதாக கூறப்படுவதால், மம்தா பானர்ஜி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பின்னணியில், ஜூனில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் திரிபுராவை தலைமையிடமாகக் கொண்ட இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்து, பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (தே.ஜ.) ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இப்போது, கூச் பெஹார் தொகுதியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி. ஜெகதீஷ் சந்திர பர்மா பசுனியா, 20 பேரில் 17 பேர் பா.ஜ.கவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் கட்சி மாறுவதால் கட்சித் தாவல் தடை சட்டம் தங்கள்மீது பொருந்தாது எனவும் கூறியுள்ளார். அபு தாஹர் கான், கலிலூர் ரஹ்மான், யூசுப் பதான் ஆகியோர் பா.ஜ.கவில் சேர மாட்டார்கள்; ஆனால் தே.ஜ. கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவார்கள் என்றும், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அல்லது மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.