வாஷிங்டன்: உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் போர் தான்; ஈரான் அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உக்ரைன், ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் கூறுகிறது. இதனால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் டீசல் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு தாம் எச்சரித்ததாக டிரம்ப் கூறினார். தற்போது ரஷ்யாவின் எரிசக்தி இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாகவும், ரஷ்யாவும் அதேபோல் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஈரான் அணு ஆயுதம் பெற ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஈரான் விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது; அமெரிக்கா அதற்கு ஒப்புக்கொள்வதா என்பதை தாம் தீர்மானிப்பேன் என்றும், ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு உதவாத சில நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெயை எடுத்துச் செல்கின்றன; அவர்கள் அமெரிக்காவுக்கு அதிகமாக ஆதரவு தர வேண்டும் என்றும் டிரம்ப் கருத்து தெரிவித்தார்.





