செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறிப்பாக காளிதாசரின் படைப்புகள் உள்ளிட்ட பாரம்பரிய இலக்கிய வளத்தை உலகளவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியில், அந்தக் கல்லூரி மற்றும் ‘ஆர்டிகுலேட் 8’ ஏஐ நிறுவனம் இணைந்து அறிமுகப்படுத்திய ‘சமஸ்கிருத பாரம்பரிய மாதிரி’ தொடக்க நிகழ்வில் அவர் பேசினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய அறிஞர்களும் முனிவர்களும் சமஸ்கிருத இலக்கணத்தையும் மொழி கட்டமைப்பையும் மிகத் துல்லியமாக உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். அந்தத் துல்லியமான கட்டமைப்பே, இன்றைய ஏஐ தொழில்நுட்பத்துடன் சமஸ்கிருதத்தை இணைப்பதற்கான முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

ஷேக்ஸ்பியரின் படைப்புகள் குறித்து பல ஆய்வுகள் மற்றும் விளக்க நூல்கள் கிடைப்பதை நினைவூட்டிய அவர், காளிதாசரின் இலக்கியச் சிறப்பு, உவமை, மொழி வளம் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல்கள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் போதுமான அளவில் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இந்த இடைவெளியை ஏஐ நிரப்ப முடியும்; காளிதாசரின் படைப்புகளை ஏஐ மூலம் ஆய்வு செய்து, அவர் பயன்படுத்திய உவமைகள், சொல்வளம், இலக்கண அமைப்பு, மனிதப் பண்புகளை வெளிப்படுத்தும் விதம் போன்றவற்றை விரைவாகத் தொகுத்து வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சமஸ்கிருதத்தின் தாக்கம் இந்தியாவைத் தாண்டி பரவியுள்ளதாக கூறிய அவர், உலகின் பல அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் உள்ள சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் சார்ந்த கையெழுத்துப் பிரதிகள், செப்பேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒருங்கிணைத்து அடையாளம் காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தின் வேகத்தையும் திறனையும் பயன்படுத்தி இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் மொழி மரபை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.