மும்பை கொலாபாவில் உள்ள பிரபலமான கபே மாண்டேகரில் உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்தின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது.

ஆய்வின்போது, சூடான உணவுப்பொருட்கள் 60 டிகிரி செல்சியஸுக்கு மேல் பராமரிக்கப்படவில்லை என்றும், குளிர்பதன கிடங்குகளின் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்கு கீழ் வைக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். தரையில் ஈரப்பதம் தொடர்பான குறைபாடுகளும் பதிவானது.

மேலும், உணவு தயாரிப்பு பகுதியை ஒட்டிய கழிவு நீர் வடிகால் அமைப்பு போதுமானதாக இல்லாததால் மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உபகரணங்கள் முறையாக சுத்தம் செய்து கிருமிநாசனம் செய்யப்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்தது.

இதற்கிடையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், ஹோட்டல்கள் மற்றும் இனிப்பு கடைகளில் துக்காராம் குழு சோதனைகளை தீவிரப்படுத்தியது. செப்.14 அன்று மட்டும் ரூ.15.5 லட்ச மதிப்புள்ள பால் மற்றும் இனிப்புப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஜால்னா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ரூ.1.35 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விழாவுக்கு முன்பாக பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய பயிலரங்கங்களும் நடத்தப்பட்டன. விழா ஏற்பாட்டாளர்கள் பங்கேற்ற 5 பயிலரங்கங்கள் நடைபெற்றதுடன், கொழுக்கட்டை தயாரிப்பில் ஈடுபடும் 110 சுய உதவிக்குழுக்களுக்காக பிர்ஹன்மும்பை மாநகராட்சியுடன் இணைந்து சிறப்பு பயிலரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு சட்டத்தின் நான்காம் அட்டவணை வழிகாட்டுதலின்படி பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகள் விளக்கப்பட்டன.