புதுடில்லி: யுபிஐ மூலம் டிஜிட்டல் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு வெளிநாடுகளின் அழுத்தம் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) யுபிஐ வழியாக வர்த்தக நிறுவனங்கள் பெறும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியானது. அதன்படி, ரூ.2,000-க்கு மேல் பெறும் நிறுவனங்களுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும்; ரூ.75,000 அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை இருந்தாலும் கட்டணம் ரூ.300 என்ற வரம்புக்குள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரே கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என்றும், பங்குச்சந்தை வணிகத்துக்கான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் NPCI தெரிவித்துள்ளது.
இதற்கு வெளிநாட்டு அழுத்தமே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பலன் ஏற்படும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சகம், இத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், தன்னிறைவு பெற்ற, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் கட்டுப்படியாகக்கூடிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சூழலை உருவாக்கும் நோக்கில் யுபிஐ கொள்கை முடிவுகள் சுதந்திரமாக எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.





