புதுடில்லி: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படும் என்ற பாகிஸ்தானின் அறிவிப்பை மத்திய அரசு கடுமையாக விமர்சித்து, அதை ‘வெற்று நாடகம்’ என குறிப்பிட்டுள்ளது.
டில்லியில் 2001-ம் ஆண்டு நடந்த பார்லிமென்ட் தாக்குதல் முதல், கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் வரை பல பயங்கரவாத வழக்குகளில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மசூத் அசாருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்கி வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிதியுதவிகளை பெறுவதில் பாகிஸ்தானுக்கு சிக்கல்கள் நீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு மற்றும் புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ. ‘மசூத் அசார் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.70 லட்சம் பரிசு’ என அறிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடே இவ்வாறு பரிசு அறிவிப்பது பயனற்ற நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். மேலும், உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சியாக இதுபோன்ற அறிவிப்புகளை பாகிஸ்தான் முன்பும் செய்துள்ளதாக கூறி, பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பயனில்லாத அறிவிப்புகள் அர்த்தமற்றவை என வலியுறுத்தினார்.





