புதுடில்லி: நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் பயன்பாடின்றி கிடந்த பொருட்களை கண்டறிந்து விற்பனை செய்ததன் மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.5,102.91 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பழைய கோப்புகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் தேங்கி கிடந்ததால் அலுவலகங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. இதற்கு தீர்வாக 2021 முதல் ‘துாய்மை மிஷன் 2.0’ திட்டத்தின் கீழ் கழிவுப் பொருட்களை சேகரித்து மறுசுழற்சி செய்து, விற்பனை வழியாக அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 24.20 லட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலகங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் 180.48 லட்சத்திற்கும் அதிகமான பழைய மற்றும் தேவையற்ற கோப்புகள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் சதுரஅடி அலுவலக இடம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிறைவடைந்த ஐந்தாம் கட்டத்தில் மட்டும் 11.6 லட்சம் இடங்கள் துாய்மைபடுத்தப்பட்டு, 29.52 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. இதனால் 233.75 லட்சம் சதுரஅடி இடம் பயன்பாட்டுக்கு கிடைத்ததுடன், ரூ.833.92 கோடி வருவாயும் ஈட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆறாம் கட்ட சிறப்பு இயக்கம் அக். 2 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செப். 16 முதல் தொடங்கி இம்மாத இறுதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துாய்மை பணியின் முன்னேற்றத்தை கண்காணிக்க இணையதளத்தை மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து துறைகள், அமைச்சகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களிலும் இந்த இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.





