புதுடில்லி: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமியை கருவை தொடரச் சுமக்க கட்டாயப்படுத்துவது, அவரது வாழ்வுரிமையை பறிப்பதற்குச் சமம் என டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

30 வார கர்ப்பத்தில் இருந்த 15 வயது சிறுமி, கருக்கலைப்புக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனு நீதிபதி மது ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கருக்கலைப்பு சட்டப்படி சாதாரண சூழ்நிலைகளில் 20 முதல் 24 வாரங்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால் பாலியல் வன்கொடுமை போன்ற விதிவிலக்கான சூழலில், பாதிக்கப்பட்டவர் கண்ணியமாக வாழும் உரிமைக்கும், உடல் சார்ந்த சுயாதீனத்திற்கும்—தாயாக விரும்புகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரத்திற்கும்—முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியது.

கருவை முழுக் காலம் சுமந்து பிரசவிக்க கட்டாயப்படுத்துவது சிறுமிக்கு மேலும் கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறி, உடல் நலம் மற்றும் மன நலத்தை கருத்தில் கொண்டு கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி மற்றும் எஸ்.கே. மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், குற்றவியல் வழக்கிற்கு உதவும் வகையில் கரு மற்றும் திசுவை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கருக்கலைப்பு சிகிச்சை மற்றும் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஒருவேளை குழந்தை உயிருடன் பிறந்தால், அதற்கான தேவையான மருத்துவ பாதுகாப்பை குழந்தை நலக் குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.