பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக, அவர்கள் தங்கள் படகுகளிலும் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறி, ரூ.1,200 கோடி செலவில் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் அமையவுள்ள பகுதி நிலத்தை வகைமாற்றம் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அப்பகுதி மக்களிடமிருந்து கருத்துகளைப் பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; வீடுகளை காலி செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் என மீனவர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து, எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் இ.சி.ஆர். நைனார் குப்பம் வரை உள்ள மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பட்டினப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசாணையை திரும்பப் பெற வேண்டும்; 1956–57ல் ஒதுக்கப்பட்ட முள்ளிக் குப்பம் மற்றும் முள்ளிமாநகர் நிலத்தை மீனவர் குடியிருப்புப் பகுதியாக உடனடியாக பதிவு செய்ய வேண்டும்; லூப் சாலையில் நடைபெறும் மீன் விற்பனை உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க கடற்கரையை ‘மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலம்’ என அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.