அகர்தலாவிலிருந்து லக்னோவுக்கு சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் புகை தொடர்பான எச்சரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் 103 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகள் இருந்தனர். பறக்கும் போது சரக்குகள்/சாமான்கள் வைக்கப்படும் பகுதியில் புகை இருப்பதாகக் காட்டும் எச்சரிக்கை மணி ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் உடனடியாக லக்னோவுக்கே திருப்பி விடப்பட்டது. தரையிறங்கும் நேரத்தில் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர் விமான நிலையத்தில் தயாராக காத்திருந்தனர்.
தரையிறங்கியதும் பயணிகள் மற்றும் சிப்பந்திகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். பின்னர் தொழில்நுட்பக் குழுவினர் சரக்கு பகுதியை ஆய்வு செய்தனர்; முதல்கட்ட ஆய்வில் புகை ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என கூறப்பட்டது.
எச்சரிக்கை ஒலி ஏன் எழுந்தது என்பது குறித்து தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





