கர்நாடகாவின் பாகல்கோட்டில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உறவினர் அரசு மருத்துவராக பணிக்கு வராமல் சம்பளம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் மேட்டியின் மருமகள் அங்கிதா ஆர்யரகால் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் வாம்பே காலனியில் உள்ள “நம்ம கிளினிக்” மையத்தில் (ஏழைகளுக்கு இலவச ஆரம்ப சுகாதார சேவை வழங்க கர்நாடக அரசு தொடங்கிய திட்டம்) மருத்துவராக 2025 ஏப்ரலில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதாகவும், மாத ஊதியம் ரூ.70,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவமனைக்கு வராமல் சம்பளம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், பாகல்கோட் தாலுகா மருத்துவ அதிகாரி சரஸ்வதி மேகி ஆய்வுக்குச் சென்ற போது அங்கிதா பணியிடத்தில் இல்லாததும், பல மாதங்களாக பணிக்கு வராமல் ஊதியம் பெற்றதாகவும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் 2026 மார்ச் முதல் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு பயின்றபடியே அரசு மருத்துவராகவும் பணியாற்றுவதாக பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இது விதிமீறல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டும் அவர் செல்லாததால், செப்.18 அன்று மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், வழங்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் திரும்பப் பெறப்படும் என்றும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.