பெங்களூரு: கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய கால்நடை மருத்துவர்கள் பணி நியமனத் தேர்வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநில அரசின் சி.ஐ.டி. விசாரணைப்படி, லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் தேர்வர்களை தேர்வு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு இடைத்தரகர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஓ.எம்.ஆர். தாள்களில் எப்படி பதில் குறிக்க வேண்டும் என்பதையும், எந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்/விட வேண்டும் என்பதையும் கூறி மாதிரி தேர்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் (ஈ.டி.) விசாரித்து வருகிறது.

விசாரணை தகவலின்படி, உண்மையான வினாத்தாள்களை பா.ஜ. பிரமுகர் பசவராஜ் கன்னாலே ரிசார்ட்டுக்கு கொண்டு வந்து தேர்வர்களிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி, தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை முன்கூட்டியே பயிற்சி அளித்ததாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வு நாளில் அந்த தேர்வர்கள் தங்களுக்கு தெரிந்த துல்லியமான கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்து, மற்றவற்றை விடுத்ததாகவும், பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்ற விடைத்தாள்களை பின்னர் ஞானேந்திர குமார் உள்ளிட்டோர் திருத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முறைகேட்டில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், பென் டிரைவ்கள் போன்ற ஆதாரங்களை மாண்டியா மாவட்ட ஸ்ரீரங்கப்பட்டணா அருகே ஓடும் காவிரி ஆற்றில் வீசியதாகவும், அவற்றை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.