சென்னை: குறுகிய காலத்தில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது, அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களை அவமதிக்கும் செயல் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் தொடர்பான மனுவை விசாரிக்கும் போது இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.

அந்த மனுவில், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ராஜினாமா செய்தவர்களே இடைத்தேர்தல் செலவுகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் நடைமுறைகள் உருவாக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.

விசாரணைக்கு பிறகு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ராஜினாமா செய்து, வேறு கட்சியில் இணைந்து மீண்டும் போட்டியிடுவது கேலிக்கூத்தாகும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இத்தகைய ராஜினாமாக்களைத் தடுக்க வழிமுறைகள் கொண்டு வர தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.