மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி, காலை 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதர தெய்வ சன்னிதிகளுக்கு இன்று அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சடங்குகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பு பணிக்காக மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்ததும் மேல்தளத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே இறங்குவதைத் தவிர்க்க பகுதி பகுதியாக பக்தர்கள் வெளியேற்றப்படுவர்; இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலில் இருந்து பக்தர்கள் வெளியேறும் எண்ணிக்கையை கணக்கிட்டு, நாளை காலை 10:00 மணி வரை சித்திரை வீதிகளில் பாஸ் இல்லாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மொபைல் போன் மூலம் முக அடையாளம் காணும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சிக்கான துாய்மை பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து 1,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கீழவெளிவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதுடன், 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன; இதற்காக ஐந்து தற்காலிக பஸ் ஸ்டாண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனை சார்பில் செப்.16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.17 முதல் 20 வரை கட்டண தரிசனம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





