பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்க புகார்களை இந்திய சைபர் குற்ற அமைப்புகளுக்கு நேரடியாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் உள்ளடக்கங்களைத் தடுக்க வேண்டும் என மத்திய அரசு மெட்டாவிடம் வலியுறுத்தி வந்தது. இந்தியாவில் செயல்படும் எந்த சமூக வலைதள நிறுவனத்துக்கும் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்; இதில் சமரசம் இல்லை என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இன்ஸ்டாகிராமில் கட்டணம் செலுத்தி வெளியிடப்படும் விளம்பரங்களில் குழந்தை பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கம் இடம்பெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலையில் மத்திய அரசு மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

புதிய ஏற்பாட்டின்படி, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை இந்திய சைபர் குற்றப்பிரிவு ஒருங்கிணைப்பு மையம் (I4C) கீழ் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மெட்டா நேரடியாக வழங்கும். இதுவரை அமெரிக்காவில் இயங்கும் ‘காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம்’ (NCMEC) வழியாகவே இத்தகைய புகார்களை நிறுவனம் கையாள்ந்து வந்தது.

மெட்டா செய்தித் தொடர்பாளர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்க அரசுடன் இணைந்து செயல்பட உறுதியாக இருப்பதாக கூறினார். இந்த அறிவிப்பு முதல் கட்ட நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், இத்தகைய குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து நீக்க மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.