புதுடில்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்படுவதாக கூறப்படும் ஷெசாத் பட்டி குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, பாகிஸ்தான் பூர்வீகமான ஷெசாத் பட்டி, ஐஎஸ்ஐ தொடர்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தன்னை சமூக வலைதள பிரபலமாக காட்டிக்கொண்டு, ஆன்லைன் வழியாக இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து குழுவில் சேர்க்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கண்டறிந்ததையடுத்து, ஆகஸ்ட் 12 அன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், பயங்கரவாத சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகவும், பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள உள்துறை அமைச்சகம், இளைஞர்கள் மற்றும் சிறிய குற்றவாளிகளை தூண்டுதல், எல்லை தாண்டி ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் கடத்தல், மேலும் நாட்டின் கட்டமைப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை குறிவைக்கும் வெறுப்புணர்வு தூண்டும் டிஜிட்டல் பதிவுகள் வெளியிடுதல் போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளது.





