புதுடில்லி: சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடற்படை கப்பலுடன் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதிய சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதியதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் படையின் இந்த நடவடிக்கை 1991ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ராணுவப் பயிற்சிகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு ஒப்பந்தத்தின் 10வது பிரிவுக்கு முரணானது என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அரசு, சம்பவத்துக்கு கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.





