புதுடில்லி: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை அடிப்படை சம்பளம் பெறுவோர் பிஎப் மற்றும் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் (இபிஎஸ்) கட்டாயமாக சேர வேண்டும். இதற்கு மேல் சம்பளம் பெறுவோர் விருப்பத்தின் பேரில் சேரலாம். 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் இந்த விதி கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது.

இப்போது ரூ.15,000 சம்பள வரம்பின் அடிப்படையில், பணியாளர் 12% ஆக ரூ.1,800 பங்களிப்பு செய்கிறார்; நிறுவனமும் அதே அளவு பங்களிக்கிறது. நிறுவன பங்களிப்பில் 3.67% பிஎப் கணக்கிலும், 8.33% ஓய்வூதியத் திட்டத்திலும் செலுத்தப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கான முக்கிய முடிவாக இதை அவர் குறிப்பிட்டார். 2014-ல் நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.15,000 வரம்பை தற்போது ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளோம் என்றும், ரூ.25,000 வரை சம்பளம் பெறுவோரும் கட்டாய பிஎப் வரம்புக்குள் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த மாற்றத்தால் 51 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள்; அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.11,339 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயர்ந்தால், பணியாளரின் மாதாந்திர பிஎப் பங்களிப்பு ரூ.3,000 ஆக உயர வாய்ப்பு உள்ளது; நிறுவனமும் அதே அளவு பங்களிக்க வேண்டியிருக்கும். நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் முடிந்த பின் புதிய விதிமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.