ஸ்வீடனில் பணியிடங்களில் பின்பற்றப்படும் நேர ஒழுங்கை குறித்து ஸ்வாதி என்ற இந்தியப் பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. ஒரு வீடியோவில், காலை 7:45 மணிக்கு அலுவலகத்துக்கு சென்றபோது பார்க்கிங் பகுதி ஏற்கனவே சுமார் 70% நிரம்பியிருந்ததாக அவர் கூறுகிறார்.
இதனை இந்திய சூழலுடன் ஒப்பிட்டு, இந்தியாவில் பொதுவாக பலர் காலை 9:00 அல்லது 9:30 மணிக்குத்தான் அலுவலகம் வருவார்கள் என்றும், ஸ்வீடனில் மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வந்து விடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மாலை 4:30 மணிக்கே அலுவலகம் பெரும்பாலும் ஆள் நடமாட்டமின்றி காலியாக இருப்பதை அவர் காட்டியிருந்தார். இந்த பதிவுகள் இந்திய மற்றும் ஐரோப்பிய கார்ப்பரேட் கலாசார வேறுபாடுகளைப் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.
இந்திய கார்ப்பரேட் ஊழியர்களிடையே இந்த வீடியோக்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் நீண்ட நேரம் வேலை செய்வதே உழைப்பின் அடையாளமாக பார்க்கப்படும் சூழல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அங்கு ஊழியர்கள் காலை 7:00 மணிக்கு குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு நேரடியாக அலுவலகம் செல்வதால், சீக்கிரம் வந்தால் மாலையில் சீக்கிரமாக வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இணையத்தில் பலர், ஸ்வீடனில் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தை விட வேலை தரத்திற்கே முக்கியத்துவம் தரப்படுவதாகவும், வார இறுதி நாட்களிலோ அல்லது மாலை 5 மணிக்கு மேலோ வேலை செய்ய வேண்டிய கட்டாயம் பொதுவாக இல்லை என்றும் கருத்து பகிர்ந்துள்ளனர்.





