மதுரை: கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களில் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகளை தமிழில் நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோவில் முன்பு தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், யாகசாலை பூஜைகள் நடைபெறும் இடங்களில் தமிழில் பாராயணம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும், அனைத்து இடங்களிலும் ஓதுவார்கள் பணியமர்த்தப்படுகின்றனர் என்றும் கூறினார்.
மேலும், தமிழகம் முழுவதும் இருந்து 27 ஓதுவார்களை சிறப்பாக மதுரைக்கு அழைத்து வந்து செப்டம்பர் 11-ம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர்கள் நிச்சயமாக பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
கோவிலில் தற்போது அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் தான் பணியாற்றி வருகிறார்கள்; அவர்களில் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.





