‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என அரசு முன்பே தெரிவித்திருந்தது.
முன்னதாக, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்வரின் லண்டன் பயணம் காரணமாக தொடக்கம் தள்ளிப்போன நிலையில், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, செப்டம்பர் 22ஆம் தேதி காமராஜர் காலை உணவு திட்டத்தையும் திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த தங்க மோதிரம் திட்டம் செயல்பாட்டுக்கு வராது என கூறப்பட்டுள்ளது.





