தமிழகத்தின் சில மாவட்டங்களில் தனியார் பஸ் சேவைகளில் டிக்கெட் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர், கடலூர், சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சில நிறுவனங்கள் ரூ.2 முதல் ரூ.5 வரை கட்டணத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில், 2018ம் ஆண்டுக்குப் பிறகு கட்டண திருத்தம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. டீசல் விலை மற்றும் உதிரி பாகங்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சென்னை, மதுரை, நாகர்கோவில், உதகை ஆகிய இடங்களைத் தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் சுமார் 4,600 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்தும் பதில் இல்லை என்பதால், சில இடங்களில் தன்னிச்சையாக கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் தாமஸ் வைத்யன், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதே நேரத்தில், தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர், கட்டண உயர்வு செய்ததாக தகவல் வந்த பஸ்களை தொடர்பு கொண்டு வழக்கமான கட்டணத்தையே வசூலிக்குமாறு அறிவுறுத்தியதாகவும், அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறினர்.