சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட மின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததுதான் என்று மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய பின் அவர் இதை கூறினார்.
செப்டம்பரில் காற்றின் வேகம் குறைவதால் காற்றாலை மின் உற்பத்தி இயல்பாகவே குறையும் என்றும், அதனால் மின் விநியோகத்தில் இடைவெளி உருவாகும் சூழல் ஏற்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார்.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் தமிழகத்தின் மின் தேவை 16,000 மெகாவாட் இருந்த நிலையில், இம்மாதம் அது 19,000 மெகாவாடாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். இதனால் கூடுதலாக சுமார் 3,000 மெகாவாட் தேவை ஏற்பட்டதால், கடந்த வாரம் வெளிச் சந்தையில் இருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இன்றும் காற்றாலை மின்சாரம் மேலும் குறைந்ததால் கூடுதலாக 1,500 மெகாவாட் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்தமாக 3,500 மெகாவாட் மின்சாரம் சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். தற்போது யூனிட் விலை சராசரியாக ரூ.20க்கும் மேல் இருப்பதாகவும், அக்டோபர் முதல் நீண்டகால ஒப்பந்தத்தின் மூலம் மின்சாரம் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





