மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக விசா புதுப்பித்தல் மற்றும் ஆவணச் சரிபார்ப்பில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், சிறிய குளறுபடிகளும் உடனடி ரத்துக்கு காரணமாகின்றன என கூறப்படுகிறது.
மேலும், குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் கருத்துகளையும் யுஏஇ அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சொந்த நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் அல்லது யுஏஇ பாதுகாப்புக்கு எதிரானதாக கருதப்படும் பதிவுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் விசாக்கள் தானாகவே ரத்து செய்யப்படும் நடைமுறை அமலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரின் விசாக்களை யுஏஇ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2026ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வங்கதேசம் உள்ளிட்ட 9 நாடுகளின் குடிமக்களுக்கு புதிய சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களை வழங்குவதை யுஏஇ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அந்த தகவல் குறிப்பிடுகிறது.
அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியான தகவலின்படி, விடுமுறைக்காக சென்ற தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பலர் யுஏஇக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். முன்னறிவிப்போ விளக்கமோ இல்லாமல் நடந்த ரத்து நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாக்களை மீண்டும் வழங்குமாறு வங்கதேச அரசு தூதரக ரீதியாக யுஏஇ அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
யுஏஇயில் சுமார் 12 லட்சம் வங்கதேசத்தினர் வசிப்பதாகவும், அவர்களில் பலரின் குடும்பங்கள் அவர்கள் அனுப்பும் பணத்தை நம்பியே வாழ்வதாகவும் கூறப்படுகிறது. வங்கதேசத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணப்பரிவர்த்தனைகளில் யுஏஇ முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.





