புதுடில்லி: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர்-தனிநபர் (P2P) பணப்பரிமாற்றங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எவ்வளவு தொகை பரிமாற்றம் நடந்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், தனிநபர்களிடமிருந்து வர்த்தகர்களுக்கு (P2M) ரூ.2,000 வரை செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தனிநபர்-வர்த்தகர் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது; ரூ.2,000-ஐ மீறும் பரிவர்த்தனைகளுக்கே கட்டணம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ரூ.2,000-ஐ கடந்த தனிநபர்-வர்த்தகர் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000 அல்லது அதற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளில் அதிகபட்சமாக ரூ.300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் அரசோ அல்லது யுபிஐ செயல்படுத்தும் என்பிசிஐயோ விதிக்கும் வரி அல்ல; யுபிஐ சேவையில் உள்ள வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகை எனவும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய உற்பத்தி துறைகளில் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை புரோக்கர்கள் மற்றும் டீலர்களுக்கு 0.02% கட்டணம் விதிக்கப்படும்; இதற்கும் அதிகபட்சம் ரூ.300 என்ற வரம்பு இருக்கும்.

இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வர்த்தகர்கள் தள்ளிவிடாமல் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், யுபிஐ சேவை வழங்குநர்கள் பயனர்களிடம் மறைமுகமாகவும் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.