அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டுள்ள 100% இறக்குமதி வரி மசோதாவை பின்னணியாகக் கொண்டு, மிரட்டல்களை எதிர்கொண்டாலும் நாடு இன்னும் வலிமையுடன் எழுச்சி பெறும் என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

செய்தி விவரப்படி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கும் மசோதா கடந்த மாதம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான இறுதி ஓட்டெடுப்பு நாளை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் நடைபெற உள்ளது.

தனது பதிவில், இந்த 100% வரி மிரட்டல் பிரிக்ஸ் கூட்டமைப்பு எடுத்த நடவடிக்கைகள் எவ்வளவு சரியானவை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும், நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்திலேயே உலகளாவிய ஒழுங்குமுறை மாறிவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது நாடு வலுவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டிய தருணம் என்றும், எழும் சவால்களும் இன்னல்களும் கடந்து போகும் என்றும் அவர் கூறினார். இத்தகைய மிரட்டல்களை எதிர்கொண்டு இந்தத் தேசம் மேலும் வலிமையுடன் எழுச்சி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.