புதுடில்லி: செயலி வழியாக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை முன்பதிவு செய்யும் சேவை நிறுவனங்கள், பயணம் முன்பதிவாகும் முன்பே டிரைவர்களுக்கு ‘டிப்ஸ்’ வழங்குமாறு கேட்கும் வசதியை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற தளங்கள் மூலம் பொதுமக்கள் மொபைல் செயலியில் கார், ஆட்டோ, பைக் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். இந்நிலையில், தேசிய நுகர்வோர் உதவி மையத்துக்கு வந்த புகார்களில், பயணம் தொடங்குவதற்கு முன்பே டிப்ஸ் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் பயணம் கிடைக்காது என்றும் வாடிக்கையாளர்கள் வற்புறுத்தப்படுவதாக கூறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கமிஷன் (CCPC) தலைவர் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை செயலர் நிதி காரே, இந்த நடைமுறை நுகர்வோரை தவறாக வழிநடத்துவதுடன் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகவும் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். டிப்ஸ் என்பது நுகர்வோரின் விருப்பம்; பயணம் முடிந்த பின் விருப்பம் இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நியாயமற்ற நடைமுறைகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக கமிஷன் தெரிவித்தது. ஆய்வின்போது, “அதிகம் செலுத்தினால் பயணம் உறுதியாக கிடைக்கும் வாய்ப்பு அதிகம்” என்பதுபோன்ற அறிவிப்புகள் மற்றும் டிரைவர்களுக்கு கூடுதலாக ரூ.10 முதல் ரூ.30 வரை சேர்த்து தருமாறு கூறும் குறிப்புகள் செயலியில் இருப்பதை கண்டறிந்ததாக கூறப்பட்டது.
விசாரணையில், முதலில் காட்டப்பட்ட கட்டணத்தை முன்பதிவு செய்த பின் டிரைவர்கள் ஏற்கவில்லை என்று கூறி கூடுதல் தொகை செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய அறிவிப்புகள் அதிகம் செலுத்தினால் விரைவில் வாகனம் கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கி, பயணம் இழக்கும் அச்சத்தில் நுகர்வோர் கூடுதல் பணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்துவதாக கமிஷன் சுட்டிக்காட்டியது.





