காங்கிரஸ் கட்சியில் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கையாக, தேசிய பொதுச்செயலர்களின் கீழ் செயல்படும் வகையில் 56 தேசிய செயலர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் புதன்கிழமை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் பணி நடந்ததாக கூறப்படுகிறது. இதில் பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், புதிய அமைப்பு முறையின் ஒரு பகுதியாக தேசிய செயலர்கள் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில அளவில் கட்சியின் செயல்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக இதை பார்க்கப்படுகிறது.
மேலும், நியமிக்கப்பட உள்ளவர்கள் டில்லியில் இருந்து மட்டுமே செயல்படாமல், அவரவருக்கு ஒதுக்கப்படும் மாநிலங்களில் குறைந்தது 15 நாட்களாவது தங்கி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் என ராகுல் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் தேசிய அளவில் முக்கிய நிர்வாகிகளை நியமித்தபோது, தேசிய செயலர்கள் பொறுப்பில் 16 பேர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து காங்கிரசும் இதுபோன்ற நியமனத்தை பரிசீலிக்கிறது என கூறப்படுகிறது.





